திருநங்கை கன்னத்தில் அறைந்த டிஎஸ்பி- சக திருநங்கைகள் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு

 
ச் ச்

சிறுவாபுரி முருகன் கோவிலில் யாசகம் பெற்ற திருநங்கைகளை பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது வாக்குவாதம் ஏற்பட்டது. திருநங்கை ஒருவரை அறைந்த பெண் டிஎஸ்பி உடன் திருநங்கைகள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். தைப்பூச தினமான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் சாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களிடம் திருநங்கைகள் யாசகம் பெற்று வருகின்றனர். 

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் திருநங்கைகளை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் டிஎஸ்பி சாந்தி திருநங்கை ஒருவரை கன்னத்தில் அறைந்த நிலையில் மற்ற திருநங்கைகள் அனைவரும் பெண் டிஎஸ்பி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் திருநங்கைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.