'மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து' - பொறியியல் கல்லூரிகளுக்கு கடும் எச்சரிக்கை!

 
students


7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொறியியல் படிப்புகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தனியார் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியது. இருப்பினும், அரசின் உத்தரவை மீறி சில கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

tn govt

இந்த நிலையில், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூலித்தால் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், ஏஐசிடிஇ வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்து இருந்தால் அதை திரும்ப வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.