ED ரெய்டு- முதல்வரை சந்தித்த துரைமுருகன்
முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக எம்பியும், திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனுமாகிய கதிர் ஆனந்த் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. 2019 மக்களவை தேர்தலில் ஓட்டு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த மற்றும் அவர் தொடர்புடைய நான்கு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதேபோல் வேலூர் மாவட்டம் கீழ்மோட்டூரில் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திய பின் முதல்வரை சந்தித்த துரைமுருகன், அமலாக்கத்துறை சோதனை குறித்து கலந்துரையாடினார்.


