முல்லை பெரியாறு அணை விவாகரம் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

 
துரைமுருகன்

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பே கேரளத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த அணை மூலம் பாசன வசதி பெறும் 5 மாவட்ட மக்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகள் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

துரைமுருகன்

அப்போது, முல்லைப் பெரியாறு அணை குறித்த விளக்கத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விதிமுறையின் படியே முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறக்கப்பட்டது. நீதிமன்றத்தின் விதிகளின் படியே 29ஆம் தேதி கேரள அரசிடம் தெரிவித்த பிறகு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி அக்டோபர் 29ல் அணையில் நீர்மட்டம் 138 அடியாகவே இருக்கவேண்டும். அக்டோபர் 29ஆம் தேதி அணையில் 138.75 அடியாக நீர் இருந்ததால் நீதிமன்ற விதிப்படி நீர்மட்டத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முல்லைப் பெரியாறில் தண்ணீர் திறந்து விடப்பட்ட போது கேரள அமைச்சர்கள் அங்கு தற்செயலாக வந்திருந்தனர் என்று தெரிவித்தார்.

துரைமுருகன்

இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையில் 15 மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளது பற்றி விளக்கம் அளித்த அவர், கேரள அரசு அனுமதி அளித்தது மாநில உள்துறை அமைச்சருக்கு தெரியாது என்பது விநோதமாக உள்ளது. கேரள வனத்துறை அமைச்சருக்கு தெரியாமல் துறை அதிகாரி மரம் வெட்ட எப்படி அனுமதிக்க முடியும்?. கேரள வனத் துறை தலைமை அதிகாரி தான் 15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதி கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார். எந்தந்த மரங்களை வெட்ட வேண்டும் என்ற எண்களையும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருந்தார். வெட்டப்படும் மரங்களை அந்த வட்டாரத்தில் இருந்து வேறு எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

வனத்துறை தலைமை அதிகாரியை கடிதம் எழுதி உள்ளதால் அதை கேரள அரசின் ஒப்புதலாக தமிழக அரசு கருதியது. மரம் வெட்ட அனுமதி அளித்ததால் கேரள அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் என்று கூறினார்.