திமுக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம்- துரைமுருகன்

 
துரைமுருகன்

முன்னாள் பிரதமர் தேவகவுடா எப்போதுமே தமிழ்நாட்டிற்கு எதிராகத்தான் பேசுவார்,  காவிரிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரகூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தவர், பிரதமர் மோடியால் மட்டுமே காவிரி பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அவர் இப்போது கூறுவது அரசியல் ஆதாயத்திற்காக என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்

வேலூர் காட்பாடியில் திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பொங்கல் விழாவை ஒட்டி திமுக தொண்டர்களை சந்தித்தார். இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் திரளானோர் வரிசையில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர். அனைவருக்கும் வேட்டி மற்றும் துண்டுகளை அமைச்சர் துரைமுருகன் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன்,துணை மேயர் சுனில்குமார்,  உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தேவகவுடா இந்திய பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்த போதும், தற்போதும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தர கூடாது என்பதில் வைராக்கியமானவர். அவர் இடத்தில் இருந்து ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு சாதமான வார்த்தைகள் வராது. தேவகவுடா டிரிப்யூனல் அமைப்பதை எதிர்த்தார், டிரிப்யூனல் கஜெட்டில் போடுவதை எதிர்த்தார். பிரதமர் மோடியால் மட்டுமே காவிரி பிரச்சினையை தீர்க்க முடியும். இப்போது கூறுவது ஆதாயத்திற்காக பேசுகிறாரோ? வெறுப்பாக பேசுகிறாரோ? ஆனால் தமிழ்நாட்டற்கு எதிர்ப்பாக தான் எப்போதும் பேசுவார்.

காவிரி ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது- துரைமுருகன்

அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும் நாங்கள் அவர் கையையா பிடித்துள்ளோம்? திமுக நாளைக்கே தேர்தல் வந்தாலும் சந்திப்போம், இது கொள்கைக்காக உருவாக்கப்பட இயக்கம். திமுக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போது இருப்பவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.