ராஜ்யசபா சீட் தருவதாக கூறிய திமுக தற்போது தரவில்லை- துரை வைகோ
நாடாளுமன்றத் தேர்தலின்போது மதிமுகவிற்கு ராஜ்யசபா சீட் தருவதாக பேசப்பட்டது என எம்பி துரைவைகோ கூறியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான கமல்ஹாசன். மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக நாடாளுமன்ற அலுவல்களில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த அவருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “வைகோவிற்கு ராஜ்யசபா சீட் தருவதாக பேசப்பட்ட நிலையில், தற்போது தரவில்லை. குறிப்பிட்ட காலத்தில் முதலமைச்சர் தேவையானதை செய்வார் என திமுக கூறியது. வைகோவிற்கு என்றால் முதலமைச்சர் செய்யாமல் இருக்கமாட்டார் என திமுகவினர் கூறினர். அப்போது வைகோவின் பதவிக்காலம் மேலும் ஒன்றேகால் ஆண்டு இருப்பதை திமுக சுட்டிக்காட்டியது. நாடாளுமன்றத் தேர்தலின்போதே ராஜ்யசபா சீட் குறித்து அறிவிக்குமாறு மதிமுக கோரியது. நாடாளுமன்றத்தில் சிங்கம்போல் கர்ஜித்தவர் வைகோ. வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. ஆனாலும், தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். நாங்கள் இனி வரும் நாட்களிலும் திமுக கூட்டணியில் தொடருவோம்” எனக் கூறியுள்ளார்.


