மிக்ஜாம் புயல் எதிரொலி- செங்கல்பட்டில் திடீர் நில அதிர்வு?

 
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் நில அதிர்வு பாதிப்பு எதுவும் இல்லை பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியர் ராகுல்நாத் பேட்டியளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை மற்றும் கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மழை நீர் முழுவதுமாக வடிந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி மீனாட்சி நகர், கூடுவாஞ்சேரி அருகே அருள்நகர் தரைபாலம் உடைப்பு ஏற்பட்ட இடங்களிலும், கூடுவாஞ்சேரி மகாலட்சுநகர், ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் ஆகிய பகுதிகளிலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டனர். மழை நீர் முழுமையாக வெளியேறிய நிலையில் இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், “செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் நிவாரண பொருட்கள் வழக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மாவட்டம் முழுவதும் 99% சதவிகிதம் மின் இனைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மோட்டர் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகின்றது விரைவில் 100 சதவிகிதம் மின் இனைப்பு வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அதிர்வு தொடர்பாக அச்சப்பட தேவையில்லை. செங்கல்பட்டு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். எனவே பாதிப்பு எதுவும் இல்லை பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என்றார்.