கனமழையால் தூத்துக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை விட்ட பின்பும் மாநகராட்சிக்கு உட்பட்ட ரகமத் நகர், ஆதிபராசக்தி நகர், மச்சாதுநகர், ராயல் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது, இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் காரணமாக பலத்த மழை பெய்தது ஏற்கனவே பெய்த மழையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து, பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த புயல் காரணமாக இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக மேலும் மழைநீர் தேங்கி பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ரகமத் நகர், ஆதிபராசக்தி நகர், ராயல் கார்டன், மச்சாது நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீரும் மழை நீருடன் கலந்து அந்தப் பகுதி முழுவதும் பாசிப்படர்ந்து துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளத. இதன் காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர் மற்றும் கழிவுநீர் காரணமாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகால் பகுதியிலும் முறையாக மழை நீர் செல்லாததால் தங்கள் பகுதியில் மழை நீர் தேங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டும் நிலையில், பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற வைக்கப்பட்டுள்ள ராட்சத மோட்டார்கள் இயங்காமல் அப்படியே உள்ளதால் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் தேங்கி வெளியேறாமல் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் முறையாக மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். மேலும் அந்த பகுதி முழுவதும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்று நீர் வாழ் பறவைகள் வாழும் சரணாலயம் போன்று மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக வீட்டுக்குள் விஷ சந்துக்கள் வீட்டில் வருவதால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அத்தியாவசிய தேவைக்கும் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


