சென்னையை புரட்டி போட்ட கனமழை; களத்தில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி!

வடகிழக்கு பருவமழை சென்னையை புரட்டி போட்டுள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அதிக மழை பெய்து இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது.
வரும் 10ஆம் தேதியும் 11ஆம் தேதியும் அதீத கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெளியூர்களுக்கு சென்ற மக்கள் அடுத்த சில நாட்களுக்கு சென்னைக்கு திரும்ப வேண்டாம் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.