எந்த காலத்திலும் தமிழ்நாடு கோரும் நிதியை ஒன்றிய அரசு வழங்குவதில்லை- எடப்பாடி பழனிசாமி

 
eps

ஒன்றிய அரசு எப்போதும் மாநில அரசுகளை மாற்றாந்தாய் பிள்ளையாகவே கருதுகிறது . மனிதாபிமானம் அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய பேரிடர் நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

eps

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைப்பெற்ற கூடத்தில் , தலைமைக்கழக நிர்வாகிகள் , மாவட்டச்செயலாளர்கள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் .  இக்கூட்டத்தில் , தமிழ் உட்பட 22 மாநில மொழிகளை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் , நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு சம்பவத்திற்கு கண்டனம் மற்றும் பாதுகாப்புகளை வலுப்படுத்த வேண்டும், வெள்ள பாதிப்புகளை முறையாக கையாளாத மாநில அரசுக்கு கண்டனம் உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


பின்னர் பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “பேரிடர் காலத்தில் தமிழக அரசு கேட்கும் நிதியை எந்த காலத்திலும் ஒன்றிய அரசு வழங்கியதாக வரலாறு இல்லை. பேரிடர் காலத்தில் கேட்கும் நிதியை மனிதாபிமானத்தோடு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஒன்றிய அரசு மாநில அரசை மாற்றந்தாய் பிள்ளையாக நடத்துகிறது. வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம், கொடுக்க வேண்டிய இடத்தில் ஒன்றிய அரசு இருக்கிறது. அதனால் நிதியை முறையாக கேட்டு பெற வேண்டும். மேலும், பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும், நிதி அமைச்சர் பாதித்த மாவட்டங்களில் சேதங்களை நேரில் பார்வைட்டு உள்ளார். மத்திய அரசு மனிதாபிமானம் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்” என்றார்.