செங்கோட்டையன் கோட்டையில் ஈபிஎஸ் இன்று பரப்புரை

 
ச்க்ஷ் ச்க்ஷ்

கே.ஏ.செங்கோட்டையன் தவெக.வில் இணைந்த நிலையில்,  கோபிசெட்டிபாளையத்தில்  இன்று மாலை நடைபெறும் அதிமுக பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, தவெக.வில் இணைந்த  நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்கிறார். செங்கோட்டையனுக்கு பதிலடி தரும் வகையில் இந்த பிரச்சார கூட்டம் இருக்கும் என்பதால்  முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத் தொகுதி வாரியாக, பிரச்சார  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  முழுமையாக நீங்கப்பட்ட பிறகு, அவர் சில தினங்கள் முன் தவெகவில் இணைந்தார்.  இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது. செங்கோட்டையனின் கோட்டை என அதிமுகவினரால்  புகழப்படும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அவர் நீக்கத்திற்கு பிறகு முதன் முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில்  ஏற்பாடுகள் செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதி முதல் நல்லகவுண்டபாளையம் வரை அதிமுக கொடிகளை கட்டியும் சாலை இருபுறமும்  வாசங்கங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை  கோபி நகரம் முழுவதும்   வைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பினை அளிக்க அதிமுகவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தை இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசப்போகிறாரா, அதிமுகவின் தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் பேசியது, அவர் பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. துரோகத்திற்கான நோபல் பரிசு எடப்பாடிக்கு தான் கொடுக்க வேண்டும், காலை வாரியவர் கோபிசெட்டிபாளையம் வருகிறார் என கே.ஏ.செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை ஏற்கனவே முன் வைத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய பிரச்சார கூட்டம் இருக்கும் என அதிமுகவினர் கூறி வருகின்றனர். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொள்ளும் இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கான  ஏற்பாடுகள் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது, முகப்பு வாயிலில் வாழை கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டு சாலை இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.