ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

 
ep ep

திருவள்ளூரில் வருகிற 16ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 4 ஆண்டு காலமாக மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருகிறது.  இதன்காரணமாக மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.  

அந்தவகையில் , திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளன. அதன் விபரம்:  

நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், குப்பைகள் முறையாக அகற்றப்படாத காரணத்தாலும், பாதாள சாக்கடை வழியாகச் செல்லும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாலும், நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. ஆனாலும் கட்சியினரின் தலையீடு அதிக அளவில் இருப்பதால், நகராட்சிக்கு  உட்பட்ட இடங்களில் போடப்படும் சாலைகள் தரம் குறைந்து  காணப்படுகிறது.  

மின்விளக்குகள் சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால், சில இடங்களில் இருளில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.  

mk stalin write a letter to jaishankar about fishermen arrest

நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வீட்டுவரி நிர்ணயம் செய்வதில் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. மாறாக, நடுத்தர மக்களிடம் அதிக அளவில்  வரிவசூல் செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.  

நகரின் மையப் பகுதியான சி.வி. நாயுடுய் சாலையில் உள்ள பூங்காவில் விதியை மீறி பூமாலை வளாகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பூங்கா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளதாலும், மறுபுறம் நகராட்சி சாலை உள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.  

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், ஆளும் கட்சியினரின் ஆதரவோடு தரமற்ற சாலைகன் அமைக்கப்படுவதை தட்டிக்கேட்காமலும், அரசு விதிகள் மீறப்படுவதை கண்டும் காணாமலும் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடவும்,தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 16.6.2025 திங்கட்கிழமை காலை 10 மணியாவில், திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

EPS
 
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையிலும் , திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரமணா முன்னிலையிலும் நடைபெறும்.
 
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாடட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாக திறனற்ற திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.