அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

 
eps

பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வியாசர்பாடி கக்கன் ஜி காலனியில் ராணி மெய்யம்மை தெருவை சேர்ந்தவர் இளங்கோ.  49 வயதான இவர் அதிமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார்.   நேற்று இரவு இவர் கட்சிப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  அப்போது முத்துமாரியம்மன் கோவில் அருகே சென்ற போது ஒரு கும்பல் இளங்கோவனை சுற்றி வளைத்தது.  பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக இளங்கோவனை வெட்டி சாய்த்தது.   இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இளங்கோவன். தகவல் அறிந்த செம்மியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளங்கோவன் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்த கொலை வழக்கில்,  பெரம்பூர் அதிமுக  பகுதி செயலாளர் கொலை வழக்கில் ஐந்து பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.   சஞ்சய், வெங்கடேசன் ,அருண்குமார், கணேசன் மற்றும் ஒரு சிறுவன் என்று ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஇஅதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர், இளங்கோ சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்,பிரதான எதிர்கட்சியில் முக்கிய பங்காற்ற கூடிய நிர்வாகிக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நம் மாநிலத்தில் நிலவவுது பெரும் கண்டனத்துக்குரியது. சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு இருப்பது வெட்ககேடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன்,இந்த நாசகார செயலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.