நிலையான முடிவு எடுக்க முடியாத திறனற்ற அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

 
eps

திமுக அரசின் நிதானமற்ற செயல்களால் மக்கள் அவதிக்குள்ளாவதாகவும்,  மக்கள் நலனை மனதில் வைத்து அரசு  கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளிக் கல்வி துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.

  இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்  உள்ளிட்டவற்றில் 12 மணிநேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி  நிறைவேற்றப்பட்டது.  ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு  கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள், மதிமுக, திராவிடக் கழகம்,  அதிமுக, பாஜக, பாமக  போன்ற கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்கங்களும்  எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.