2வது நாளாக இன்றும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி..!
சென்னையில் இன்று 2வது நாளாக மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் 22 கட்சி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக எம்ஜிஆர் மாளிகையில், கழக பொதுச்செயலாளர் தலைமையில் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த ஆலோசனைக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று (ஜூன் 24) காலை 9.30 மணிக்கு, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பகல் 3.30 மணிக்கு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேந்த நிர்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 25 காலை 9.30 மணிக்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளையும், பகல் 3.30 மணிக்கு, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார்.


