கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் - இபிஎஸ் இரங்கல்

 
eps

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த  மீனவர் ராஜா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (வயது 45), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) ஆகியோர் பரிசல் ஒன்றில் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறில் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மீனவர்கள் ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பி ஓடிய நிலையில், ராஜா மாயமானார். இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது உண்மை என்பது தெரியவந்தது. இந்த துப்பாகிச்சூட்டில் ராஜா என்பவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. அடிப்பாலாறு பகுதியில் ராஜா உடல் கண்டெடுக்கபட்டது.

tamilnadu fishermen


 
கர்நாடக வனத்துறையின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த  மீனவர் ராஜா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
 என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். மேலும் அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.