தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் மறைவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ் சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பல்வேறு சேவைகள் செய்த பேரறிஞருமான, உயர்திரு. சலாஹுத்தீன் அயூப் அவர்கள் மறைவுற்றார்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தலைமை காஜி உயர்திரு.சலாஹுத்தீன் அயூப் அவர்களின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது தொண்டினை நினைவுகூர்கின்ற இவ்வேளையில், அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். மேலும் அன்னாரது குடும்பத்திற்கும், இஸ்லாமிய சகோதரர் , சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


