இதே டெல்டாகாரன் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது - ஈபிஎஸ் கடும் தாக்கு

 
eps

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் நானும் டெல்டாகாரன் தான் என கூறும் மு.க.ஸ்டாலின் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் நிலக்கரி அறிவிப்பு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. புதிய நிலக்கரி சுரங்க அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். டெல்டாவை பாதுகாத்தது அதிமுக அரசு, அதை திமுக அரசு தொடர வேண்டும்.   நிலக்கரி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு. நானும் டெல்டாகாரன் தான் என்கிறார் முதலமைச்சர். இதே டெல்டாகாரன் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது. மீத்தேன் திட்டத்தை கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு திட்டத்துக்கு கையெழுத்திட்டவர் தான் மு.க.ஸ்டாலின்.  

நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய போது விமர்சித்த ஸ்டாலின் தற்போது கடிதம் மட்டுமே எழுதி வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. சட்டமன்றத்தில் பேசினால் போதாது. திட்டத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் தான் தீர்வு கிடைக்கும். நிலக்கரி சுரங்க விவகாரத்தில் திமுக அரசு கும்பகர்ணன் போல் தூங்க கூடாது. இவ்வாறு கூறினார்.