அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் கூறுவதற்கு தடை விதிக்க வேண்டும் - ஈபிஎஸ் தரப்பு புகார்

 
eps

அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம், சமூக வலைதளங்களில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமின் முழு கட்டுப்பாட்டில் தற்போது அதிமுக இயங்கி வருகிறது. ஆனால் அதிமுகவிற்கு நான் தான் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதிமுகவின் கொடி, கரைவேட்டி, லேட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம், சமூக வலைதளங்களில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என எடப்பாடி தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதத்திற்காக மார்ச் 12ம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.