அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி - எடப்பாடி பழனிசாமி

 
eps

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்ந்தெடுத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 
 
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். அவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டதால் அவரே பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டவிரோதமாக நடைபெறுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக தேர்தலை நடத்த தடையில்லை அதே நேரத்தில், தேர்தல் முடிவுகளை மறு உத்தரவு வரும் வரை அறிவிக்க கூடாது என அறிவுறுத்தினர்.  

high court

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது சரிதான் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிவித்தனர். 

ep

இதனை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுக்கொண்டார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராக என்னை அதிமுக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. 
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்ந்தெடுத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.