தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

 
eps

தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.  

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த இரண்டு ஆண்டுகால திறமையற்ற, கையாலாகாத விடியா திமுக அரசின் தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்று மக்களை திசை திருப்பும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, விவசாயம் தொடர்பான தொழில்களைக் காக்க எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்காது வேளாண் பெருமக்களை ஏமாற்றி வருகிறது. 

குறிப்பாக, தென்னை விவசாயிகள் விடியா திமுக ஆட்சியில் வாழ்விழந்து நிற்கும் அவலம் தமிழகத்தின் சாபக்கேடாகும்.  தமிழகத்தில் பொள்ளாச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தேனி, நத்தம், உடுமலைப்பேட்டை போன்ற 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் தென்னை விவசாயம்தான் பிரதான தொழிலாகும். சுமார் 15 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் விவசாயிகள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இதுதவிர இளநீர் விற்பது, தேங்காய் நார் உற்பத்தி, நாற்கயிறு, பித்கட்டி, தேங்காய் நாரில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட உபதொழில்களில் சுமார் 15 லட்சம் பேர் மறைமுகமாகவும் தென்னையை நம்பி உள்ளனர். தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னைதான் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.  2021-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின்போது, 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த திமுக, பதவியேற்று 27 மாதங்களாகியும் மக்களுக்கு நேரடியாக பலன் அளிக்கக்கூடிய பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  

eps

எனவே, விடியா திமுக அரசு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், ஒரு கிலோ கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலையை ரூ. 150-ஆக உயர்த்த வேண்டும் என்றும், தென்னையை பருவ கால பயிராகக் கருதாமல், ஆண்டுக்கு ஏழு முறை குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், தேங்காய் எண்ணெய்யை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்றும், தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருட்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தென்னை விவசாயிகளை ஒன்று திரட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.