யானை தாக்கி மூதாட்டி பலி! வால்பாறையில் பரபரப்பு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலியானார்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை. இடது கரை பகுதியில் குடியிருப்புகள் உள்ளது. வீடு ஒன்றில் மேரி(78) தனியாக வசித்து வருகிறார். மகன் மற்றும் மகள்கள் குடும்பத்தினர் வெளியூரில் வசிக்கின்றனர். தனியாக வசித்து வரும் மேரிக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் தெய்வானை(67) என்பவர் தோழி ஆவார். எனவே 2 பேரும் மேரி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒன்றை யானை மேரி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளது. யானை வந்ததை தெரிந்து கொண்ட இரண்டு பாட்டிகள் பயந்து வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, முன்பக்க கதவை திறந்து வெளியேறினார்.
வீட்டிற்கு முன் தெருவிளக்கு இல்லாத ஒற்றையடி பாதை வழியாக தப்பி ஓடினர். தெய்வானை சற்று முன்னதாக ஓடினார். பின் தொடர்ந்து மேரி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் மேரி யானையிடம் சிக்கினார். யானை அவரை மிதித்து கொன்றது. இதில் உடலில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.தப்பிய தெய்வானை பாட்டி நடந்தவற்றை அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் இணைந்து தேடி மேரியின் உடலை கண்டுபிடித்தனர். பின்னர் வனத்துறை, காவல்துறைக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆய்வு செய்த சோலையார் அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். காயம் அடைந்த தெய்வானை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.


