குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை உயிரிழப்பு.! பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி..
குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமியின் உடலுக்கு, அமைச்சர்கள் பெரியகருப்பண் , குன்றக்குடி ஆதீனம் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள சண்முகநாதர் கோவிலுக்கு 1971 ஆம் ஆண்டு பக்தர் ஒருவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட யானை சுப்புலட்சுமி. தற்போது 54 வயதாகும் சுப்புலெட்சுமி குன்றக்குடி கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சுப்புலட்சுமி பக்தர்களின் அன்பை பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யானை கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுப்புலட்சுமி யானையும் சிக்கிக்கொண்டது. உடனடியாக பாகன் மற்றும் அங்கிருந்தவர்கள் யானையை மீட்டனர். இருப்பினும் யானைக்கு 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டதோடு, தகவலின்பேரில் மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமையிலான வன அலுவலர்கள் மற்றும் மதுரையில் இருந்து வனத்துறை மருத்துவர் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து யானை சுப்புலெட்சுமிக்கு தீவிர உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் குன்றக்குடி வந்து யானையை நேரில் பார்த்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இருப்பினும் நேற்று நள்ளிரவு 1.50 மணிக்கு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனையடுத்து குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் மறைந்த யானை சுப்புலட்சுமிக்கு, கண்ணீர் மல்க மாலை வஸ்திரம் சாத்தி அஞ்சலி செலுத்தினார். தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள யானை சுப்புலெட்சுமிக்கு, பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனும் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக யானை சுப்புலட்சுமிக்கு மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்விக்கப்பட்டது. மேலும், காரைக்குடி சாலையில் யானையை நல்லடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.