மின்வாரிய ஊழியர்கள் சட்டவிரோதமாக அடைப்பு.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குக - சீமான்..
மின் வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக வைக்கப்படுவதை நிறுத்திவிட்டு, அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக முக்கியமான கோரிக்கைகளான இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரிகின்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு வட்டம் விட்டு வட்டம் மாறுதல் வழங்க கோரியும், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாகப் பணிநிலை உயர்த்தக் கோரியும் கோரிக்கை மனுக்கள் பலமுறை கொடுக்கப்பட்டு மின்வாரியத்தின் சார்பிலும் அரசின் சார்பிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், செயற்பொறியாளர் அலுவலகங்களின் முன்பாகவும் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள 11 தலைமை பொறியாளர்கள் அலுவலகம் முன்பாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பின்னும் அவர்களது கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாத சூழ்நிலையில், தொழில் தகராறு சட்டப் பிரிவுகளின் படி மின்வாரிய செயலாளர், மின்வாரியத்துறை தலைவர், மின் வாரியத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோருக்கு முறைப்படி வேலைநிறுத்தம் தொடர்பாக கடிதம் கொடுத்து அந்த கடிதத்தின் அடிப்படையில் வரும் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டமும் அதன் பின்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 22ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையறையற்ற வேலை நிறுத்தமும் செய்வதென முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருகின்ற வழியில் ஆங்காங்கே காவல்துறையால் மறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவே உடனடியாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அவர்களை விடுவித்து சட்டப்படி உரிய அனுமதியோடு நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.