நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 1.43 லட்சம் மாணவர்களுக்கு வேலை
நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 64,943 பேரும், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 78,196 பேரும் வளாக நேர்காணலில் பணி ஆணை பெற்றுள்ளதாக நான் முதல்வன் திட்டக் குழு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு துறைசார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கும் நோக்கில் முதலமைச்சரால் துவங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் மூலம், கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நோக்கில் துவங்கப்பட்ட ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து நான் முதல்வன் திட்டம் சாதனை புரிந்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் துவங்கப்பட்ட இத்திட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் என உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அந்தந்த கல்லூரி வளாகங்களிலேயே வழங்கி வருகிறது. இவ்வாறு திறன் பயிற்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் பொறியியல் கல்லூரிகளில் இதுவரை நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு முகாம்களில் 64,943 மாணவர்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளார்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 78,196 மாணவர்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளதாக நான் முதல்வன் திட்டக் குழு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் Saint Gobain, Microsoft SAP (Edunet), Mr.Cooper, Tech Mahindra, Aditya Brila Group, Byju's, Flipcart, HDFC, ICICI, India Cements, FoxCon, Muthoot Finance, Sutherland, Star Health Alliance போன்ற முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.