பொறியியல் படிப்பு: ஜூலை 14ல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்..!!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்காக 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பட்டு வருகின்றன. இதனை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இணைய வழியில் நடத்திவருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதி முடிவடைந்தது.
கலந்தாய்வில் பங்கேற்க 3 லட்சத்து 2,374 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்க கட்டணம் செலுத்தி உரிய சான்றிதழ்களையும் பதிவேற்றியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று 2025 - 26ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறுமெனவும், ஜூலை 7ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பொறியியல் தர வரிசை பட்டியலில் 145 பேர் 200/200 கட் ஆஃப் எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கும். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூரைச் சேர்ந்த மாணவி தரணி முதலிடம் பிடித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்” என்று கூறினார்.
மேலும், கணினி வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். www.tneaonline.org என்னும் இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ரேங்க் மதிப்பெண்களை அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


