மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஜூலை 11ல் ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் அறிவிப்பு..

 
eps eps

 திமுக அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஜூலை 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

 இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது, திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு. இதற்கெல்லாம் விடிவுகாலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த வகையில், செங்கல்பட்டு - மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:

தாம்பரம் மாநகராட்சி

*அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

*நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்றுகூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.

*அஸ்தினாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களும், பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

*குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய் நிலையில் உள்ளது. இதனால், உயிர் நீத்தோருக்கான இறுதிச் சடங்குகளை மக்கள் மிகவும் அச்சத்துடன் செய்து வருகின்றனர். 

*அஸ்தினாபுரம் பகுதியில் நாள்தோறும் 5 எண்ணிக்கையில் சிற்றுந்துகள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு சிற்றுந்து மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

*இப்பகுதி முழுவதும் முறையாக குப்பைகள் அள்ளப்படாத காரணத்தால், அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. இதனால், பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

*மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு வரி உயர்வுகள் மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

*மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஜூலை 11ல் ஆர்ப்பாட்டம்  - இபிஎஸ் அறிவிப்பு.. 
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3ல் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதிக் கழகத்தின் சார்பில் 11.7.2025 வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் சந்திப்பு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. D. ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், Ex. M.P., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.