அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - ஈபிஎஸ்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்பின் திருஉருவமாம், கருணையின் வடிவமாம் தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளை, உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிட, உவகைப் பெருக்குடன் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் அன்பு கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். "உன் மீது நீ அன்பு செலுத்துவது போல், அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்" என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி வீட்டினை அழுகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் 'கிறிஸ்துமஸ்' வாழ்த்துச் செய்தி. #MerryChristmas pic.twitter.com/jTYEzBifhA
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) December 24, 2024
"நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும்" என்ற இயேசுபிரானின் போதனையை மனதில்கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


