கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் அதிரடி..! சட்டசபை தேர்தலில் வெற்றி விழா பொதுக்கூட்டம் இங்கு தான் நடக்கும்..!

 
1 1

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கலந்துகொண்டார். தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்புக்குப் பிறகு அவர் பேசுகையில், இங்கு கூடியுள்ள கூட்டமே வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவதை உறுதி செய்வதாகத் தெரிவித்தார். "யாரோ கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள், அந்தக் கனவை நொறுக்கிவிட்டீர்கள். அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்," என்று உறுதிபடக் கூறினார். மேலும், தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எடப்பாடி தொகுதியை விட, அதிமுக ஆட்சி மலர்ந்த பின் கோபிசெட்டிபாளையம் தொகுதி தமிழகத்திலேயே முதன்மையான தொகுதியாக வளர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

திமுக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்த இபிஎஸ், இது 'கையால் ஆகாத அரசு' என்றும், மக்கள் நலனில் அக்கறை இல்லாத 'ஸ்டாலின் மாடல் அரசு' என்றும் சாடினார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக 50 ஆண்டுகளாகப் போராடிய விவசாயிகளின் கனவை நிறைவேற்றியது அதிமுக ஆட்சிதான் என்று பெருமிதம் கொண்டார். மேலும், கடந்த ஆட்சியில் மத்திய அரசிடம் அனுமதி பெற்ற சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் வரையில் 4 வழிச்சாலை மற்றும் பவானி சாகர் முதல் பவானி வரையிலான 4 வழிச்சாலை திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும், போதை மருந்து தங்குதடையின்றி கிடைக்கிறது என்றும் கூறிய அவர், தமிழகத்தில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு அதிகார மையங்கள் செயல்படுவதே சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டிற்குக் காரணம் என்றும் விமர்சித்தார்.

விவசாயம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியாது என்றும், "நானும் வரேன், நீங்களும் வாங்க. விவசாயப் பயிர்களின் பெயரை சரியாகச் சொல்லிவிட்டால் நான் ஒத்துக் கொள்கிறேன்" என்று சவால் விடுத்தார். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகவும், ஆனால் முதல்வர் சினிமா பார்க்கச் சென்றதாகவும் சாடினார். மேலும், திமுக ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ₹10 வசூலித்ததன் மூலம் நான்கு ஆண்டுகளில் திமுக தலைமைக்கு ₹22,000 கோடி சென்றுள்ளது என்றும், நகர்ப்புற வளர்ச்சித்துறையில் ₹800 கோடி ஊழல் என்றும், இன்னும் கொஞ்ச நாட்களில் அமைச்சர்கள் எல்லாம் சிறைக்குப் போய்விடுவார்கள் என்றும் எச்சரித்தார்.

இறுதியாக, கோபியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்துப் பேசிய இபிஎஸ், கட்சிக்குள் இருந்தே துரோகம் செய்ததால் தான் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் அவர் செல்வது வருந்தத்தக்கது என்றும் கூறினார். "இவரைப் போல சுயநலவாதி நானில்லை. 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், கோபிசெட்டிபாளையத்தில் தான் வெற்றி விழா கொண்டாடுவோம்," என்று சபதமிட்டார். எந்தக் கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும், அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி என்றும் பேசிய அவர், இந்த மோசமான திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் தான் 2026 சட்டசபை தேர்தல் என்றும் தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.