பொதுச்செயலாளராக முதல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி - என்ன தெரியுமா?

 
ep

வருகிற ஏப்ரல் மாதம் 05ம் தேதி முதல் அதிமுக புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். அவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டதால் அவரே பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டவிரோதமாக நடைபெறுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து அவர் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

eps

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஆகிய பின்னர் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 (புதன்கிழமை) முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும். கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10 வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.