கர்நாடகாவில் ஓபிஎஸ் வேட்பாளரின் மனு ஏற்பு - எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் கடிதம்..

 
eps

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள்  இருவரது வேட்புமனுக்களை  ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.

 224 உறுப்பினர்களை கொண்ட  கர்நாடக  சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதை ஒட்டி,  அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். . இந்நிலையில், நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசனை நிறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

ops

இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்புக்கு 3 தொகுதிகளில் வேட்பாளரை அறிவித்து இருந்தார். அதன்படி புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் நெடுஞ்செழியனின் வேட்புமனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்பு மனு புலிகேசிநகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில்   காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் அனந்தராஜ் ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. இதில் காந்தி நகரில் போட்டியிடும் குமார் அதிமுக வேட்பாளர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், “கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனுவை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.