தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்
Jan 28, 2025, 12:55 IST1738049132543
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 25.1.2025 ம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், மீனவர்களது படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது என்றும், விடியா திமுக அரசு மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக கருதி அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவதாக பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறேன். மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


