அதிமுகவில் இபிஎஸ் மகன், மாப்பிள்ளை குடும்பத்தினர் தான் அதிமுகவை நடத்துகின்றனர - செங்கோட்டையன்..!
கோபிசெட்டிபாளையம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "அதிமுக மீண்டும் வெற்றிபெற வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றேன். அதற்கு பிறகு கழக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். யார் என்னிடம் பேசினாலும் நடவடிக்கை எடுக்கும் நிலை இன்று உள்ளது. நிர்வாகிகள் நீக்கம் அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல்" என்றார்.
ஜெயலலிதா இருந்த போது 2009ஆம் ஆண்டு இன்றைய பொதுச் செயலாளர் அவர்களை கழகத்தின் அனைத்து பணிகளில் இருந்து விலக்கினார்கள்.2012ல் என்னையும் கழகப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்கள். ஆனால் அதன்பிறகு எங்களை அரவணைத்து சென்ற வரலாறு இருக்கிறது. தற்போது அது போன்ற சூழல் இல்லை. என்னிடம் யார் பேசினாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கவில்லை. ஆனால், இன்று என்னை சுற்றியுள்ளவர்களை கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி, ஏன், கோடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. என்னை பி டீம் என்றார்கள். உண்மையில் யார் பி டீம் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக அமர்த்தவில்லை. அவரை 2009ஆம் ஆண்டு பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதல்-அமைச்சராக ஆகி இருக்க முடியாது. அம்மா மூலம் 3 முறை முதல்வர் ஆனவர் ஓபிஎஸ். ஆனால் கொல்லைப்புறமாக முதல்வர் பதவிக்கு வந்தவர் இபிஎஸ். ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மட்டும் தான் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். இவரை ஏன் அமர வைக்கவில்லை என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.
ஏனெனில் இவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று கூறியிருக்கிறார். எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், இவர் முதல்-அமைச்சரே ஆகியிருக்க முடியாது. எனவே கொள்ளைப்புறம் வழியாக முதல்-அமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எனச் சொல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. பழைய விஷயங்களை கிளற ஆரம்பித்தால் நிறைய இருக்கின்றன. ஆனால் அவ்வாறு விமர்சிப்பவன் நான் அல்ல.
"சட்டமன்றத்தில் இபிஎஸ்-க்கு பின்னால் தான் அமர்ந்திருந்தேன். ஒருமுறை கூட என்ன குறை என்று இபிஎஸ் கேட்டதில்லை" என்று கூறிய செங்கோட்டையன், "எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்தவில்லை. மகன், மாப்பிள்ளை, மருமகன், அக்கா மகன் ஆகியோர்தான் அதிமுகவை நடத்துகின்றனர். அப்படி என்றால் இந்த இயக்கத்திற்காக தியாகம் செய்தவர்கள், உயிராக நேசித்தவர்கள், இந்த இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களிடம் மண்டியிட வேண்டிய நிலை உள்ளது.
என்னை அழைத்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறியதே பாஜகதான். தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் அவர் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாக பேசினார். கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் எடப்பாடி. அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார்.
அதிமுகவில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமியின் மகன், மருமகன், மைத்துனர்தான் அதிமுகவை நடத்துகின்றனர். நீங்கள் ஏன் குடும்ப அரசியல் பற்றி முன்னரே பேசவில்லை என கேட்டதற்கு வாரிசு அரசியல் குறித்து முன்னரே பேசியிருந்தால், அப்போதே கட்சியில் இருந்து நீக்கியிருப்பார்கள்" என்று குற்றம்சாட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.


