இரணியல் ரயில் திட்டம் : ஜல்லி கிடங்கை இடம் மாற்றுக - விஜய் வசந்த் கோரிக்கை..
இரணியல் ரயில் நிலையத்தில் திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கை இடமாற்றம் செய்யவேண்டும் என காங்கிரஸ் எம்.பி,, விஜய் வசந்த், தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “இரணியல் ரயில் நிலையத்தில் ஜல்லி கிடங்கு ஓன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கிடங்கு நடை மேடைக்கு மிக அருகில் அமைகிறது. ஆதலால் இங்கிருந்து கிளம்பும் தூசி மற்றும் மாசு பொருட்கள் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக அமையும் என பொது மக்கள் சார்ப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அருகாமையில் உள்ள சுமார் 40 வீடுகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் 19 அன்று ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி ஒருங்கிணைத்த கூட்டம் ஒன்று அவர் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஜல்லி கிடங்கை அங்கு அமைப்பதன் மூலம் ஏற்படும் தீங்கினை எடுத்து கூறினார்கள்.
இதையடுத்து சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து இரணியல் ரயில் நிலையத்தில் செயல்பட இருக்கும் ஜல்லி கிடங்கு குறித்த மக்களின் ஆதங்கத்தை எடுத்து கூறினார். மாசு காரணமாக மக்களின் ஆரோக்கியம் மற்றும் வீடுகள் பாதிக்கப்படும் என்பதை எடுத்து கூறி, நடை மேடையில் இருந்து தூரத்தில் இந்த ஜல்லி கிடங்கை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்காக இரணியல் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் இந்த ஜல்லி கிடங்கை அமைக்கலாம் எனவும் விஜய் வசந்த் அவர்கள் கருத்தினை முன் வைத்தார். மேலும் இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் ரயில்வே துறையின் சம்பத்தப்பட்ட அதிகாரிகளை கொண்ட ஒரு நிபுணர் குழு அமைத்து அவர்களை இரணியல் ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தவும் கேட்டு கொண்டார்.”