84 நிபந்தனைகளுடன் ஈரோடு த.வெ.க கூட்டத்துக்கு அனுமதி..!
ஈரோடு மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி நடைபெறவிருக்கும் மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு மாவட்டக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவில் நிலத்தைப் பயன்படுத்துவதற்காக ரூ.50,000 வாடகைத் தொகையாகவும், கூடுதலாக ரூ.50,000 டெபாசிட் தொகையாகவும் என மொத்தம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னரே அனுமதி உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்ட நிலம் கோவில் நிலம் என்பதால், அங்கு அரசியல் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் மற்றும் நிர்வாகிகள் சுமார் ஒரு மாதமாகத் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட சூழலில், திடீரென முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தது பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனுக்கு உள்ள அனுபவமும், ஆதரவு வலிமையும் த.வெ.க-வின் வளர்ச்சிக்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. இவரின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம், கொங்கு மண்டலத்தில் கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் நேரடியாக மேற்கொண்டார். சுமார் 75 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில், 7 ஏக்கர் முதல் 31 ஏக்கர் வரையிலான பரப்பளவில் பெரிய கூட்டம் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்தக் கூட்டம் டிச.16ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை தரப்பில் சுமார் 84 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த நிபந்தனைகள் குறித்து விளக்கம் அளிக்கவும், ஏற்பாடுகளைச் சரிசெய்யவும் அவகாசம் தேவைப்பட்டதால், கூட்டத்தின் தேதி டிசம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
காவல்துறையின் ஆய்வுக்குப் பின், இறுதியாக டிசம்பர் 18 அன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ளரங்கு மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்திய பிறகு, விஜய் தனது அரசியல் பயணத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக இந்த ஈரோடு மக்கள் சந்திப்பு பார்க்கப்படுகிறது.


