“உலகின் அனைத்து மின்னணு சாதனங்களிலும் இந்திய தயாரிப்பு சிப் இருக்க வேண்டும்” – பிரதமர் மோடி
டெல்லி புறநகர்ப் பகுதியில் நடந்த ‘செமிகான் 2024’ மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்று விநியோக சங்கலியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.மேலும் அதில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. விநியோக சங்கலியின் மீள்தன்மை பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியானது. பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் அதை உருவாக்க இந்தியா முயன்று வருகிறது.
சீனாவில் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகள் அந்நாட்டின் இறக்குமதி சார்ந்த தொழில்கள் மற்றும் துறைகளைக் கடுமையாக பாதித்தது. இதனால் கொரோனா பெருந்தொற்றின் போது விநியோக சங்கிலி பெரும் அதிர்வலைகளைக் கண்டது. அதில் ஒன்று, அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் முக்கியத் தேவையான சிப் துறை.
உலகின் அனைத்து சாதனங்களிலும் இந்தியாவில் தயாரான சிப்-கள் இருக்க வேண்டும் என்பது எங்களின் கனவு. இந்தியாவை செமிகண்டெக்டர் மையமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் செய்வோம். சீர்திருத்த அரசு, வளர்ந்து வரும் உற்பத்தித் தளம் மற்றும் தொழில்நுட்பத்தை உள்வாங்கும் ஓர் ஆர்வமுள்ள சந்தை ஆகியை சிப் தயாரிப்புக்கான சக்தியை வழங்குகின்றன.
இன்று இந்தியா உலகிற்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. செமிகண்டெக்டர் துறையில் ஏற்கனவே ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பல திட்டங்கள் செயல்முறையில் உள்ளன” என்று பிரதமர் பேசினார்.