3வது வழக்கிலும் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. நாளைக்குள் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்ப்பு..

 
ஜெயக்குமார்


ரூ. 5 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவரிடமிருந்து ரூ 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ,மகள் ஜெயப்பிரியா ,மருமகன் நவீன் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.  முன்னதாக ரூ. 5 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

சென்னை உயர் நீதிமன்றம்

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் காவல்துறை விளக்கமளிக்க உத்தரவிட்டும்,  மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.  திருச்சியில் 2 வாரங்கள் தங்கி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், வாரம்தோறும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. 

ஜெயக்குமார்

ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக நிர்வாகியை தாக்கி அரைநிர்வாணப்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலில் கைது செய்யப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து கொரோனா தொற்று பரவும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இந்த 2 வழக்குகளிலும் முன்னதாகவே ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும் நில அபகரிப்பு வழக்கு காரணமாக  அவர் வெளியே வர முடியாத நிலை இருந்தது.  தற்போது இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்திருப்பதால், ஜெயக்குமார் இன்று அல்லது நாளைக்குள் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.