மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் 6 மாதம் ஜாமீன்

 
r

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.  மேலும் ஆறு மாதங்கள் அவருக்கு ஜாமீன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.   ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக நடந்த மோசடி தொடர்பான வழக்கில் இவ்வாறு ஜாமீன் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

 கடந்த அதிமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.  இவர் தனது பதவிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீதும் மேலும் சிலர் மீதும் புகார் எழுந்தது.   அது தொடர்பாக வழக்கு பதிவானது. 

r

 இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.  இந்த ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்று ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி  ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.   இந்த மனுவை நீதிபதி கே. எம். ஜோசப் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது .

அப்போது,   தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் வழக்கறிஞர் வி. கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.   அவர் தனது வாதத்தின் போது,  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த டிஜேபி பரிந்துரைத்துள்ளார்.   முன்னாள் அமைச்சர் என்பதால் ஆளுநரிடம் ஒப்புதல் பெற ஆறு மாதம் ஆகும்.  அதனால் இதற்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .

 ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி,   ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லுகின்ற வகையில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார் .   இறுதி தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர் .  மேலும் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு வழங்கிய ஜாமினை மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்தும் உத்தரவிட்டனர் .  அதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வெளியே செல்கின்ற பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோரலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.