அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!
போதைப் பொருள் வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் மதுபான கூடத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மதுபான கூட்டத்தில் நடந்த தகராறு தொடர்பாக அதிமுக ஐடி விங் நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத், அதிமுகவை சேர்ந்த அஜய் வாண்டையார், பரமக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்ட ஆறு பேர் கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். இதனைத்தொடர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி பிரசாத் மீது மேலும் வழக்குகள் குவிந்தன. பப்பில் தகராறு செய்த விவகாரத்தில் 3 வழக்குகளும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மோசடிக்கு 2 வழக்குகள் என ஏற்கனவே 5 வழக்குகள் பிரசாத் மீது பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு போத்தைபொருளை விற்பனை செய்தது அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் தான் என்பது தெரியவந்துள்ளது. நடிகர் ஸ்ரீகாந்துக்கு பிரசாத் 8 முறை போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளனர்.


