சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடக்க இருந்த தேர்வுகள் ரத்து
தொடர்மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

நேற்றிரவு முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை நகர்ப்புறங்களில் இடைவிடாத மழை பதிவாகி வருகிறது. வானிலை மைய எச்சரிக்கைகளையும், நிலைமையின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, பொதுவாக முன் இரவு அல்லது காலையில் விடுமுறை அறிவிக்கப்படும்; ஆனால் இன்றைய தினம் இது இடம்பெறாததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென்று வர வேண்டிய சூழல் உருவானது.
இந்நிலையில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும், நாளை (டிசம்பர் 02) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை (டிசம்பர் 02) நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


