சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு
சென்னையில், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 7 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடர்ச்சயாக நாய்கடி சம்பவங்கள் நடந்ததால் வளர்ப்பு நாய்களுக்கும், விலங்குகளுக்கும் உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. நவம்பர் 24 ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும் போது, அவற்றுக்கு முகவாய் கவசம் போட வேண்டும் எனவும், கழுத்து கயிறு இல்லாமல் வெளியில் அழைத்து செல்லக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்படாமல் பிராணிகளை வைத்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், முகவாய் கவசம் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை எதிர்த்து, இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சி தரப்பில், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் போது நாய்களுக்கு முகவாய் கவசம் அணிவிப்பது கட்டாயம் இல்லை என்ற போதும் அதற்கு அபராதம் விதிக்கப்படாது என்றாலும் அவற்றுக்கு கழுத்து கயிறு கட்டாமல் அழைத்துச் செல்லக்கூடாது என்பது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் இதுவரை 82,000 பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு ஒரு முறை மட்டுமே மைக்ரோ சிப் பொருத்தினால் போதுமானது என்றும் வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் பதிவு செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், நான்கு பிராணிகள் பதிவு செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டு விட்டதாகவும் 4 பிராணிகளுக்கு மேல் பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்றும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். அதேசமயம் நீதிமன்றத்தில் தெரிவித்த இந்த விளக்கத்தை ஒரு வாரத்தில் அறிவிப்பானையாக வெளியிட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


