பிரபல இயக்குநர் கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலை
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றிய இயக்குனர் கோபிநாத் நாராயணமூர்த்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 29ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் மேம்பாலம் பகுதியில் இருந்து ஒருவர் அடையாறு ஆற்றில் குதித்ததாக தகவல் வெளியானது. இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர், வாகனத்தை மேம்பாலத்தில் நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்பு–மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று பிற்பகல் கோட்டூர்புரம்–வரதராஜபுரம் பகுதியில் மிதந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் உயிரிழந்தவர் இயக்குனர் கோபிநாத் நாராயணமூர்த்தி என்பது உறுதி செய்யப்பட்டது.
‘கோ, அவள்’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய அவர், ‘கோதையின் குரல்’ என்ற விருது பெற்ற குறும்படத்தை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றார். சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் நடித்த ‘தங்க முட்டைகள்’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். மேலும், அவர் இயக்கிய ஒரு தெலுங்கு படம் விரைவில் வெளியாக உள்ளது. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்றதன் காரணமாகவும், பிள்ளைகளை அவர் பார்க்க அனுமதிக்காததாலும், உளைச்சலில், சினிமா தொழிலில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. தாயுடன் ராயப்பேட்டையில் வசித்து வந்த கோபிநாத், எதனால் இந்த விபரீத முடிவு எடுத்தார் என குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


