ஈரோடு மாவட்டத்தை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது... 54 பவுன் தங்க நகைகள் மீட்பு!

 
arrest generic

ஈரோடு மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 54 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில்  திருடுபோன பொருட்களை மீட்கும் வகையில் எஸ்.பி. சசிமோகன், டிஎஸ்பி மேற்பார்வையில் குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெருந்துறை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரை ஓட்டி வந்தது கோயம்புத்தூர் மாவட்டம்  மங்களா பாளையம், வலையன்குட்டை பாபு தோட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (55) என தெரியவந்தது.

இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிகோவில், மலையம்பாளையம், மற்றும் கோபி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, கொள்ளையன் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 54  பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் வினோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

erode

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார், பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 275 திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 178 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் திருட்டுப்போன நகை மற்றும் வழிப்பறி நகைகள் என 240 பவுன் நகைகள், 15 கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் மதிப்பு ரூ.1 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 418 ஆகும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுபோன்று  தொடர்ந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.