"விருதுநகரே விடைபெறுகிறேன்!" - ஆட்சியர் ஜெயசீலனின் நெகிழ்ச்சியான கடிதம் வைரல்..!!
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், "விருதுநகரே விடைபெறுகிறேன்!" எனமக்களுக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழநாடு முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் என 55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு அண்மையில் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த ஆட்சியர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது பணிபுரியும் மாவட்ட மக்கள் ஆட்சியர்களுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வருகின்றனர். அந்தவகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தற்போது சென்னை மாநகராட்சி இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் மக்களுக்கு ‘விருதுநகரே விடைபெறுகிறேன்’ என அவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில், “கலெக்டராக வேண்டும் என்ற கனவு பத்தாம் வகுப்பில் வந்தது. கல்வி மற்றும் கடும் உழைப்பின் வழியாக ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த பொறுப்புகளுக்குப்பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
விருதுநகர் மாவட்டம் தொழில், வேளாண்மை, வர்த்தகத் துறைகளில் கடந்த ஓரு நூற்றாண்டில் நிகழ்த்திய வளர்ச்சி இம் மக்களின் உழைப்பின் சிறப்பை விளக்குகிறது. கல்வி, உயர்தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தில் நம் மாவட்டம் இன்றும் பல மடங்கு உயர்ந்து செழிப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..!
மாவட்டத்தின் அமைச்சர்கள், சக அலுவலர்கள், சார்நிலைப் பணியாளர்கள் நேர்முக உதவியாளர்கள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதை மகிழ்வோடு நினைவுகூறுகிறேன்.
விருதுநகர் மாவட்டத்தின் அன்பு மக்களுக்கும் , என் பணிக்காலத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் , குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றியும் வணக்கமும். மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


