மின்சாரம் தாக்கி விவசாயி பலி! ராமநாதபுரத்தில் சோகம்
ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் -கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல்(50) என்பவர் இன்று மேலத்தூவல் பகுதியில் உள்ள அவரது ஆட்டுக் கிடைக்கு காலையில் வந்துள்ளார். ஏற்கனவே தாழ்வாக தொங்கி நேற்று மழையினால் தரையில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்ததில் சித்திரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரை காப்பாற்ற வந்த அவரது 11ம் வகுப்பு படிக்கும் மகன் கிஷோர்குமார்(16) பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கீழத்தூவல் போலீசார் சித்திரவேல் உடலை கைப்பற்றி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


