3-வதும் பெண் குழந்தை! 14 நாட்களே ஆன சிசுவை கொன்ற தந்தை
ஒசூர் அருகே பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த தந்தை கைது செய்யப்ட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாதையன் (46) இவரது முதல் மனைவி முனியம்மா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சின்னம்மா (38) என்பவரை மாதையன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகன் மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமடைந்த சின்னம்மாவிற்கு கடந்த 14 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து பெண் குழந்தை பிறந்ததால் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி சின்னம்மாவிடம் பச்சிளம் பெண் குழந்தையை கொன்று விடலாம் என மாதையன் கூறியுள்ளார். இதற்கு சின்னம்மா மறுப்பு தெரிவித்தால் மனைவியை திட்டி தள்ளி விட்டு விட்டு குழந்தையை துாக்கி கொண்டு மாதையன் வெளியே ஓடியுள்ளார். இதனால் அவரை பின்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சென்ற சின்னம்மா மாதையனை தேடி சென்றார். எங்கு தேடியும் கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை. இந்த நிலையில் இரவு 9 மணிக்கு மாதையன் தனது வீட்டின் அருகே உள்ள பாறையில் குழந்தையை போட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.
இதை கவனித்த சின்னம்மா பாறை மீது சென்று பார்த்த போது அங்கு குழந்தை பேச்சு, மூச்சின்றி கிடந்தது. கன்னத்தில் காயங்கள் இருந்தன. பின்னர் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அவர் கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செலமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து குழந்தையை தந்தை மாதையன் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் கொலை வழக்குப்பதிவு செய்த கெலமங்கலம் போலீசார் மாதையனை நேற்றிரவு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.