கண்டெய்னர் லாரிகளுக்கு FC கட்டணம் ரூ.3000-லிருந்து 28,000-ஆக உயர்வு
கண்டெய்னர் லாரிகளுக்கு FC கட்டணம் 3000 ரூபாயிலிருந்து 28 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதிக்காக பயன்படுத்தப்படும் கண்டெய்னர் ட்ரைலர் லாரிகளின் எப் சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது லாரி உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 15 முதல் 20 ஆண்டுகள் வரை உள்ள பழைய கனரக கண்டெய்னர் லாரிகளுக்கு எப்சி எனப்படும் தகுதி சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் 850 ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் மற்றும் கண்டெய்னர் லாரிகளுக்கு 3000 ரூபாய் இருந்த எப் சி கட்டணம் 28000 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வாகன திருத்த சட்டத்தின்படி கனரக வாகனங்களுக்கு எப் சி கட்டணத்தை உயர்த்தி சட்டமேற்றியுள்ளது. அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதால் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக தொகை விதித்துள்ள வரி விதிப்பை 10 நாட்களுக்குள் திரும்ப பெறாவிட்டால் சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், எண்ணூர் துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து ட்ரைலர் வாகன உரிமையாளர்களின் சங்கங்கள் அறிவித்துள்ளனர்
இதுதொடர்பாக ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள டிரைலர் உரிமையாளர்கள் சங்க அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தினர் கூறியதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கண்டெய்னர் லாரி தொழிலில் ஒரு கோடி பேர் ஈடுபட்டு வருகின்றனர். டீசல் விலை உயர்வால் நாங்கள் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். தற்போது வாகன புதுப்பிப்பு பணி செய்யும்போது பெயிண்ட், பேப்ரிகேசன் அனைவரும் தங்களுடைய பராமரிப்பு தொகையை உயர்த்தி உள்ளனர். இதுமட்டுமல்லால் 2021 ஆம் ஆண்டு முதல் 3 மாதத்திற்கான வாகன வரி ரூ.7500 இல் இருந்து ரூ.10500 ஆக அதிகப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு லாரிக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் வாகன புதுப்பிற்கு செல்லும்போது ஆன்லைன் அபராதத்தை முழுவதுமாக செலுத்தக்கூடிய நிலை உள்ளது. மேலும் தற்போது வாகன புதுப்பிற்கான புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டு உடனடியாக அது செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் 15 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் உள்ள வாகனங்களுக்கு புதுப்பிப்பு கட்டணம் ரூ.850 இல் இருந்து ரூ.14 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு புதுப்பிப்பு கட்டணம் ரூ.850 இல் இருந்து ரூ.28 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாக எந்தவித வாடகை உயர்வும் இல்லாமல் கண்டெய்னர் லாரி தொழிலில் ஈடுபட்டு வரும் எங்களை நசுக்கும் செயலாகவே இது அமைந்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் புதிய வாகன புதுப்பிப்பு கட்டணத்தை திரும்ப பெறவும், ஆன்லைன் அபராதத்தை தடுக்கும் நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் இன்றில் இருந்து 10 ஆவது நாள் சென்னையில் உள்ள 3 துறைமுகங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தோழமை சங்கங்களையும் ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்க மாட்டோம் என தெரிவித்தனர்.


