#ADMK கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி:எஸ்.பி. வேலுமணி அதிரடி

 
Velumani
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை அனைத்து கட்சியினரும் அறிவித்து வருகின்றனர்.
கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமாரும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசுகையில், கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி. பாஜகவை பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்களின் ஓட்டு 4% சதவீதம் மட்டுமே.
அவர்களின் கட்சி தமிழகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறார்கள், அவ்வாறு வைத்துக் கொண்டால் கூட இன்னும் ஒரு ஆறு சதவீத ஓட்டுகள் அதிகரித்தாலும் 10% ஓட்டுகளை வைத்து அவர்களால் வெல்ல முடியாது.
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் கோவையில் இல்லவே இல்லை. 
ஆகவே நான் கூறியது போல போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டும்தான் பாஜகவிற்கு இங்கு வேலையே இல்லை என்று அதிரடியாக பேசினார்.