காதலனுடன் சண்டை- இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
காதலனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை, இளங்கோ சாலையை சேர்ந்த அஸ்வின் (25) என்பவரும், தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த பசலிகா(24)வும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அடிக்கடி தகராறு செய்து கொண்டு சில நாட்கள் பேசாமல் இருப்பதும் பிறகு மீண்டும் ஒன்றாக சுற்றுவதும் வழக்கம். காதலன் அஸ்வினுடன் சண்டை நடந்த போது நான்கு முறை எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே தேனாம்பேட்டை போலீசாரும் பலமுறை பசலிகாவை அழைத்து அறிவுரை கூறியுள்ளனர்.
இந்நிலையில், 18.03.2025 ம் தேதி மாலை 16:00 மணி அளவில் பசலிக்காவுக்கும் காதலன் அஸ்வினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கி கொண்டுள்ளனர். பின்பு போனில் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை பசலிகா தேனாம்பேட்டை பீர்க்காரன் தெருவில் வசித்து வரும் சகோதரியிடம் மொபைல் மூலமாக தொடர்பு கொண்டு, அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். அவரது சகோதரி, நல்லான் தெருவில் வசிக்கும் உறவினர்களுக்கு போன் செய்து நடந்த விவரத்தை கூறியுள்ளார். உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டிக்கிடந்தது.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பசலிக்கா மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பசலிகா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, காதலன் அஸ்வினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


