நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனை சிறையிலடைக்க உத்தரவு..!
மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்டோர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.தேவநாதன் உட்பட ஆறு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தேவநாதன் உள்ளிட்டோர், மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், '100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்' என்ற நிபந்தனையுடன், இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமின் நிபந்தனைகளை நிறைவேற்றாததால், தேவநாதனை உடனே கைது செய்ய, காவல் துறைக்கு சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஜாமின் நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி, தேவநாதன் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் அஸ்வின்குமார், அரசு ஆகியோர் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தனர். அதை ஏற்று, தேவநாதனின் மனுவை தள்ளுபடி செய்து, அவரை உடனே கைது செய்ய, பொருளாதார குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் சரணடைந்த தேவநாதனை நவ.24 வரை சிறையிலடைக்க உத்தரவு! ரூ.100 கோடி டெபாசிட் நிபந்தனையை நிறைவேற்றாததால் தேவநாதனை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இடைக்கால ஜாமின் நீட்டிப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தேவநாதன் சரண் அடைந்தார்


